இரத்தம் தோய்ந்த அந்த நாட்கள்

Written by தமிழ்பித்தன் on 7:41 PM

அன்று ஒரு நாள் மதிமயங்கும் மாலைப்பொழுது நாங்கள் வழமையாக சிறுவர் பெரியோர் வேறுபாடுகள் அற்று குவிக்கப்பட்டிருந்த மணலிலே இருந்து விளையாடிக்கொண்டிருந்தோம். திடீரென வல்வெட்டித்துறையிலிருந்து பலத்த துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட சத்தங்கள் கேட்டன. அப்பா திடீரென எழுந்து சைக்கிளையும் எடுத்துக்கொண்டு என்ன நடந்தது என்று அறிய தனது ஆலமர அரட்டை நண்பர்களை நாடிச்சென்றார். பின் அப்பா வந்து நடந்ததை கூறினார்

ஆமாம் நான் கூறும் காலப்பகுதி இந்திய அமைதிப்படை இலங்கையில் அமைதியை ஏற்படுத்துமுகமாக தமிழர்தாயக பகுதியெங்கும் குவிந்திருந்தகாலமது. அன்று வழமை போல் தமது ரோந்து நடவடிக்கைகளுக்காக சென்ற இந்திய இராணுவத்தின் மீது சிறு துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து விட்டு சிவன் கோவிலின் பின் வீதியால் ஓடத்தொடங்கினான். அவனை துரத்திக்கொண்டு ஏராளமான இராணுவத்தினர் சென்ற வேளையில் கோயிலின் உட்புறம் ஒளிந்திருந்த விடுதலைப்புலிகளின் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளாகி ஸ்தலத்திலேயே பல படையினர் இறக்க மற்றவர் தப்பித்திக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவரும் வல்வெட்டித்துறை முகாமைச் சேர்ந்த படையினர் ஆவார்கள்.

இதையறிந்த பல குடும்பங்கள் என்ன நடக்க இருக்கிறதோ என்ற அச்சத்தில் இரவிரவோடு இரவாக எங்கள் கிராமத்தை நோக்கி படை எடுக்கின்றனர். ஆனாலும் மறுநாள்காலை வரை ஒன்றும் நடக்கவில்லை என்பதை உறுதிசெய்த பின்னர் தங்கள் அன்றாட கடமைகளுக்காக ஊர்திரும்புகின்றனர்.
எங்கள் அம்மம்மா கூட எங்கள் வீட்டில் விளைந்த காய்கறிகளை கொண்டு வல்வெட்டித்துறைச் சந்தைக்கு புறப்பட்டு விட்டா.."

காலை ஒரு பதினொருமணிளவில் தீடிரென பொலிகண்டி முகாமிலிருந்து அழைத்து வரப்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் வல்வெடடித்துறை சந்தியில் இறக்கி விடப்படுகின்றனர். அதாவது முதலில் சந்தை கட்டடத்துக்குள் புகுந்தவர்கள். அங்கே இயங்குகின்ற கலைச்சோலை புத்தக கடையில் வேலை செய்த அவரது மகன்களை சுட்டு விட்டு கடையையும்கொழுத்திவிட்டு பின் சந்தையின் உட்புறத்தினுள் சென்று கண்முடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தையும் வாள் வீச்சுக்களையும் செய்கிறார்கள். மக்கள் என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முதலே எல்லாம் நடந்து முடிந்தது.

பின் அங்கிருந்து வெளியேறியவர்கள் நாளாபக்கமும் பிரிந்து சென்று மக்கள் மீதும் அவர்கள் உடமைகள் மீதும் வீடுவீடா சென்று தாக்குதல் நடத்துகிறார்கள் அதில் ஒரு குழு ஒரு திரையரங்கத்தை அப்படியே அழிக்கிறார்கள்.

எங்கள் ஊருக்கு அனைத்து சத்தங்களும் தெளிவாக கேட்கிறது சத்தம் வரவர கிட்ட கேட்பது போல இருக்கவே நாங்கள் உடுப்பிட்டியை நோக்கி நகர்ந்தோம். ஆனால் வந்தவன் தீருவில் பகுதியை தாக்கிவிட்டு திரும்பி விடுகிறான் ஆனால் தீருவில் பகுதியை சேர்ந்தவர்கள் முன்னதாகவே இடம்பெயர்ந்ததால் உயிர்ச்சேதம் எதுவும் இருக்கவில்லை.

மாலை 5 மணியளவில் அப்பா என்னையும் ஏற்றிக்கொண்டு அம்மம்மாவைத் தேடி புறப்படுகிறார் தீருவில் தாண்டி சிவன் கோவிலின் முன் வீதியை அடைந்த போது அங்காங்கே மக்கள் பிணங்களை அகற்றுவதை காண முடிந்தது. நான் சிறுவன் என்பதனால் அப்பா உடனே தன் சாரத்தை கிழித்து என் கண்களை கட்டி விடுகிறார். சந்தையை அடைந்த நாங்கள் அம்மம்மாவை தேடுகிறோம். பின் அம்மம்மா ஒரு மூலையில் அழுதபடி இருப்பதை கண்டு ஆனந்தம் அடைகிறோம் .பின் அவாவையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறோம்
அம்மம்மா உட்பட 25 பேர் ஒரு மலசல கூடத்தினுள் ஒழிந்து தப்பிக்கொண்டனர்.

என் கண்கட்டப்பட்டிருந்தாலும் அப்போது வீசிய இரத்தவாடை இப்போதும் நாசியை விட்டு விலகமறுக்கிறது ஆமாம் அத்தாக்குதலில் மொத்தம் 83 அப்பாவி பொதுமக்ககள் அநியாயமமாக கொல்லப்பட்டிருந்தனர்

இந்திய தேசமே எம் தந்தை தேசம்
எங்களை ஏன் அழித்தாய்
எம்மால் அப்போது எமக்குள்
அழத்தான் முடிந்ததே

வேலியாகத் தானே பார்த்தோம் உன்னை
நீயே எம்மை மேய்ந்தாயே
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை
இரக்கமின்றியே நசித்துக் கொன்றாயே

காந்திய தேசமே காந்தியம் இதுதானா?
காலனின் கயிரெடுத்து நேரே வந்தாயோ
தமிழனின் உயிர் குடித்து
குலம் அழிக்க

வல்லரசு என்று கூறி வல்லூராகி வந்தாய்
வசந்தம் வீசிய வல்வெட்டித்துறையில்
வாடைவீசச் செய்தாய்
வதைகள் பல செய்தாய்

இந்திய ராணுவம் படுகொலைககள் செய்த இடங்கள்(எனக்கு தெரிந்தவை மட்டும்)
யாழ் வைத்தியசாலைப் படுகொலை
பிரம்படிப் படுகொலை

எம் இதயங்களில் என்று அந்த வடு மாறுமோ தெரியாது. ஆனாலும் இது தான் தமிழீழத்தின் தனிசோகக்கதை இல்லை ஆயிரமாயிரம் சோகங்கள் நிறைந்து. அனைத்தையும் பார்த்து விட்டு எமக்குள்ளே மவுனமாக அழுகிறோம். நாங்கள் சபிக்கப்பட்டவரா? வாழத்தான் ஆசையற்றரவரா? எமக்கு ஏன் வாழ அருகதை இல்லையா? எம்முன்னோர் கட்டிவளர்த்த தேசம் அதில் வாழ உரிமையில்லையா? வந்தவனும் போனவனும் தீண்டிப்பார்க்க நாங்கள் என்ன குரங்காட்டிக் குரங்குகளா?

எங்களுக்கு நீதி சொல் எவரும் இல்லையா?

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 கருத்துக்கள்: Responses to “ இரத்தம் தோய்ந்த அந்த நாட்கள் ”