போய் வருகின்றேன்! நன்றி!!!?

Written by தமிழ்பித்தன் on 5:37 AM

சில வேளைகளில் எனது பதிவுகள் எல்லை மீறி போயிருப்பதை நானும் அறிவேன். அதற்கான சில நியாயப்படுத்த தக்க காரணங்கள் இருப்பினும் அவற்றை எல்லாம் இங்கே சுட்டிக்காட்ட நான் விரும்பவில்லை. நான் என்னை நீயாயப்படுத்தி நல்லவன் என பெயர் எடுக்கவும் விரும்பவில்லை. சில விசமிகள் திட்டமிட்டே என் பின்னூட்டல் பெட்டியை அசிங்கம் செய்ததையும் அறிவேன். அவற்றுக்கா அவ்பின்னூட்டங்களை மட்டறுக்க முடியாமல் இருந்தமைக்கு மன்னிப்பு கேட்கிறேன்.அத்துடன் அந்த சர்ச்சைக்குரிய அந்த பதிவுகள் நீக்கவும் படுகின்றன.

இது வரை இந்த பித்தனின் பிதற்றலை பாசத்தோடு வாசித்து உரிமையோடு தோளில் தட்டி உற்சாக மூட்டிய உறவுகள், சிலதை தவறு என எதிர்த்து நின்று வழி நடத்திய நண்பர்கள். நான் வலைப்பதிவில் வந்து கொடுத்ததைக்காட்டிலும் பெற்றுச் செல்வதே அதிகம் ஆகவே என்றும் நான் உங்கள் கடனாளியே......

காலங்கள் மாறும் வரும் காட்சிகளும் மாறும் மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறி மீண்டும் உங்களிடம் வருவேன். உங்களை செல்லமாக கிள்ளி விளையாட அது வரை உங்கள் விளையாட்டுக்கள் அனைத்தையும் மூன்றாம் ஆளாக நின்று பார்த்து சிரிப்பேன் சில வேளை மனம் வெம்புவேன் இத்தருணத்தில் நான் இல்லையே என்று சிலவேளை வருந்துவேன் இன்னும் மாறவில்லையா என்று...

நான் வளத்த மாவும் பலாவும் என்நாவிற்கில்லை,
நான் வளர்த பசுவின்பால் என் ரீயிற்க்குள்ளில்லை,ஆனாலும்
மாடு தாகத்தால் கதறும் போது உள்ளுக்குள் சில விரிசல்கள்.
அந்த விரிசல் ரணமாகி உதிரமாகிவராதவை,
கண்ணீராகி காற்றோடு கலப்பவை
அந்த கண்ணீர்த்துளி பசுவின் தாகத்தை போக்குமா??

நான் வளத்த வளர்ந்த உறவுகள் முகம் சுழிக்கும் போது
வளத்த நாய் மட்டும் நன்றியுடன் என் காலடியில்
என்னிதயம் அதன் காலடியில்

பிரிவுத்துயர் மிகவும் கொடியது அதை பல முறை அனுபவித்தவன் அதுவே நான் பிரிவதால் பிரிபவர் ஆனந்தமடைகிறார் எனின் அதுவே எனக்கு ஆனந்தமும் கூட..


ஆயுத முனையைக் காட்டிலும் அகிம்சையை நேசிப்பவன் என்ற முறையில் இனிமேல் எந்த தனிநபர் மீதோ அல்லது ஏதாவது திரட்டிகள் நான் ஏதாவது சந்தர்ப்பத்திலும் ஏதாவது ஒர் இடத்திலும் நான் ஒளிந்து நின்று எதிர்க்மாட்டேன். எதிர்க்க விரும்பின் நேரே வருவேன் அவ்வாறு எதிர்க்க பலம் போத வில்லையா மௌனித்து போவேன். அந்த மௌனங்கள் சம்மதங்கள் ஆகாது.

-நன்றி

ஐயோ... நம்ம பப்பியை சுட்டுட்டாங்கள்

Written by தமிழ்பித்தன் on 8:05 AM


அப்பாவும் அண்ணணும் அருகில் இருந்த தோட்டத்துக்கு மிசின் பூட்ட சென்றிருந்தனர். நான் ரீ குடித்து கொண்டிருந்தனான் சிறிது நேரத்தில் ஆறு வெடியோசைகள் தொடர்ந்து கேட்கின்றன.தொடர்ந்து ஐயோ பப்பியை சுட்டுட்டாங்கள், என்று அண்ணணுடைய குரல் கேட்கிறது. நானும் அம்மாவும் வீட்டுக்கு வெளியே ஓடியந்து பார்கிறோம். எமது செல்ல நாய்குட்டி (6 மாதம் தானிருக்கும்) பப்பி 6 குண்டுகளால் சல்லடை போடப்பட்டு சாகடிக்கப்பட்டு இறந்து கிடந்தது. எல்லோர் கண்ணிலும் நீர் கசிகிறது. இருவர் சாரத்துடன் இரு துவக்குடன் நாய்குட்டிக்கு கிட்டவந்து மச்சான் செத்துட்டுதுடா? . என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள் எவருக்கும் துணிவில்லை எதிர்த்து கேள்வி கேட்க.

அப்போது, அம்மம்மா ஏன்றா தம்பிகளா சுட்டியள் என்று கேட்கிறார் அப்போது அவர்கள் "மனிதருக்கே சாப்பிட சாப்பாடில்லை இதெல்லாம் எதற்க்கு நம்நாட்டில் என்று சொல்லி விட்டு" செல்கிறார் சிறிது நேரம் கழிந்து மீண்டும் சில வெடியோசைகள்........

ஆமாம் நான் பால் குடிக்கும் என்னருகில் ஓர் சிரங்கை பாலுக்காக ஒரு மணிநேரம் காவல் காக்குமே படுக்கும் வரைக்கும் என்னுடன் கொஞ்சி விளையாடுமே அது எங்கே..

"ஒர் உயிர் போகும் போது ஒராயிரம் கண்ணீர் பூக்கள் சிந்தப்பட்டால் ஒன்றில் அந்த உயிர் விலைமதிக்கதக்கது ((அரசியல் சினிமா வகை பிரபல்யங்களாக இருக்கலாம்)) அல்லது அந்த நாடு விலைமதிக்க தக்கது அதுவே சொர்க்கத்தின் சாட்சியம். அங்கே சித்தாந்தம், தத்துவ புரட்சி, மறுமலர்ச்சி எதுவுமே தேவையற்றது "

-- ஜோட்ச் பெனடிட்

மாயாவின் மயூரனுக்கு கண்டணம்! மொக்கை வாழ்க கும்மியும் வாழ்க!

Written by தமிழ்பித்தன் on 7:04 AM

இன்று மாயா வலைப்பூ மயூரன் அவர்கள் ரெம்ப அழுது புலம்பி தள்ளிட்டாரு. நம்ம மொக்கைகளையும் கும்மியையும் இழிவாக தரம் குறைச்சு பேசிட்டாரு. இதனால், நம்ம மொக்கைகள் கும்மிகள் ரெம்ப மனம் நெந்து இருப்பதாக அறிக முடிகிறது.

மயூரன் அண்ணா நீங்கள் பெரிய எழுத்தாளர் தரத்தில் எழுதுபவர்கள் எங்களுக்கு அப்படி எல்லாம் எழுத தெரியாது. நாங்கள் புகையிலை இடுக்குகளில் சிறிதாக தெரிகிற கிளை ஒடித்து விட்டு களைப்பில் ஆலமர நிழலில் வெட்டிப்பேச்சு பேசித்தானையா பழக்கம் எங்களுக்கு, உங்களை மாதிரி தத்துவம் அறிவியல் சிந்தனை எல்லாம் ஒத்து வராத விசயம் நாங்களும் வலைபதிகிறோம். என்கின்ற ஒரு பெருமைக்காக ஏதோ தட்டவிழைகிறோம். அது உங்களை எரிச்சலூட்டி அழவைக்கும் என்று சத்தியமாக நாம் நினைத்ததில்லை.

ஆரம்பத்தில் எழுத வேணும் என்று ஆசைப்பட்ட போது பத்திரிகைகளுக்கு அனுப்பினோம் அவை நிறைவேற வில்லை. ஆனாலும், பாடசாலையில் ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். மாதம் ஒரு இதழ் வெளியிடுவது என, முதல் தடவையாக அன்று அச்சில் வந்த எனது எழுத்துக்களை கண்ட மகிழ்சிதான், இன்றும் தொடர்கிறது, இந்த வலைப்பூவில்.ஒருடத்தையும் விடுகிறார்கள் இல்லை என்றுதானே இங்கே வந்தோம் இங்கேயிருந்தும் விரட்டினால் எங்கே பொவோம்.

கேளரவம் படத்தோனியில் சொல்வதானால் "மயூரா போக வேணும் என்றுதான் தோனுது எனக்கு தமிழ் மணத்தை விட்டால் யாரை ஐயா தெரியும் நான் யாருட்ட போக"

இனி விசயத்துக்கு வருவோம். ஆரம்பத்தில் நானும் யாழ்பாணத்திலிருந்து பதிந்து கொண்டிருந்த கால கட்டத்தில் நன்றாக தத்துவம் கவிதை என வெட்டியாக சிந்தித்து எழுதுவதுண்டு. ஒரு ஆங்கில கவிஞனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ஒருவன் தத்துவம் கதைக்கிறான் எனின் அவனுக்கு தனிமையில் சிந்திக்க நேரம் இருக்கிறது. அது போலவே நானும் ஒரு பொறுப்பற்றவன் என்று கூறியிருப்பார்.
கிடைக்கிற நேரத்தில் உங்கள் மாதிரியானவர்களின் நல்ல வலைப்பூக்களையும் களைப்பும் மனச்சுமை நீங்க சில மொக்கைகளையும் வாசித்து விட்டு என்ன எழுத தோன்றுகிறதோ அதையே கிறிக்கி விட்டு செல்லகின்ற ஜாதி ஐயா நாங்கள்.

உங்களுக்கு திடீர் ஞானோதயத்துக்கு காரணம் என்ன????

///இவ்வாறனவர்களின் பதிவுகளால் தான் " ஆச்சி மசாலா உமா " (அதாங்க பெப்சி உமா ) வரை Bloging ஐ குறை சொல்லும் நிலைக்கு கொண்டுபோய்விட்டது///


ஆச்சி மாமியை திட்டியமையா??? (நீங்கள் அவர் தீவிர ரசிகர் என தெரியாது எங்களுக்கு)

பின்னூட்டம் அதிகம் தேவையானால்
உங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இட வேலைக்கு யாரையாவது அமர்த்தலாமே??

நல்ல ஒரு பதிவுக்கு பின்னூட்டம் எதற்க்கு அதை வாசித்தவர் பயன் அடைகிறார்கள். எத்தனைபேர் வாசித்தார்கள் என்பதற்ககு கணிப்பான் இருக்கிறது.

எங்களை மாதிரி மொக்கைக்கும் கும்மிக்கும் ஆயிரம் மாற்றுக்கருத்து இருக்கும் அவர்கள் எங்களை திட்டி சபித்து விட்டு செல்ல பின்னூட்ட வசதி பயன்படுகிறது.

////கொஞ்சம் நல்லா எழுதுறவங்களும் வலையுலகை விட்டு விலகிப்போவது நிஜமான வலையுலகவாசிகளுக்கு மாபெரும் இழப்பு..///

அப்படியா??
சாதாரண வலைப்பதிவில் எதிர்த்து நிலைக்க தென்பற்றவர்கள். நாளை வாழ்க்கையில் வீசப்போகிற சூறாவளிக்கு எவ்வாறும் முகம் கொடுக்க போகிறார்கள்.

///ஒரு வலைப்பதிவர் எல்லாவற்றையும் ஒரே பதிவில் எழுதாமல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பதிவுகள் தொடஙகலாம் அதேமாதிரி திரட்டிகளையும் தொடங்கலாம் . . . //

இதற்கு எனது ஆலோசனை நீங்கள் தமிழ்மணத்தின் வகைப்படுத்தியவையை பயன்படுத்தலாம் அவ்வகைப்படுத்தலில் புதிதாக ஏதாவதை சேர்க்க விரும்பினால் தமிழ்மண நிர்வாகிகளுக்கு அறிவியுங்கள். அவர்கள் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள். அல்லது நீங்கள் வாசிக்க விரும்பும் வலைப்பூவை கூகிள் ரீடரில் சேமித்து வைக்கலாம். அல்லது ஒரு திரட்டியை நீங்களே வடிவமைக்கலாம் அதற்க்கு ரவிசங்கர் உதவுவார்.

///இனி என்றாவதொருநாள் வலைப்பக்கங்களுக்குள் நுழையும் போது தேநீர் கடையில் நடக்கும் ஒரு அரசியல் சண்டை போன்று ஒரே கூச்சலும் குழப்பமுமாக இல்லாது . ஒரு தென்றல் வீசும் நந்தவனத்திற்குள் நுழைந்த உணர்வு மட்டுமே ஏற்படும் சூழ்நிலை உருவாகும் , இந்த இணையப் பதிவு எனும் " நல்லதோர் வீனையை ". . .நலமுடன் பேணுவார்கள் என்ற நம்பிக்கையேடு///

ஏனையா வீணை கீணை என்று பழசோடையெல்லாம் வலைப்பூவை ஒப்பிடுகிறீர். இது நவின யுகத்து ரம்செட் போன்றது.
விவேக் சொல்லது போல தூக்கிப் போட்டு குத்துங்கோய்ய்ய்ய...யா...........

எங்கே எனது அறுஞாகொடி? (நினைவில் மலர்பவை 3)

Written by தமிழ்பித்தன் on 7:14 AM

அறுஞா கொடி என்றால் முதல் விளக்கம் கொடுக்க வேணும் பாருங்கோ பேந்து அது தெரியாமல் இது வாசிச்சு பிரியோசனம் இல்லை. அறுஞா கொடி என்றால் சிறு வயது ஆண் பிள்ளைகளுக்கு இடுப்பில் கட்டப்படுகின்ற ஓரு கறுத்த கயிரோ அல்லது பவுனில் செய்ததாகவோ இருக்கலாம். சுந்தரா ரவல்ஸ் படத்தில் முரளி கடனை அடைக்க இதைத்தான் அறுத்து கொடுப்பார்.

நான் அறிகிற வயசில் நான் அணிந்து கொண்டது பவுனால்தான் இருந்தது. அந்த காலத்தில் அதை வெளியே தெரிய காட்ட வேணும் என்று கால்சட்டையை இடுப்புக்கு கீழே இறக்கிவிடுவதுண்டு. (இங்க கறுவல்களோடே சேர்ந்து நம்மடையளும் ஜீன்சை முழங்காலுக்கு கீழ விட்டு நடக்கமாட்டாமல் திரியுதுகள் அதுகள் என்னத்தை காட்ட ஆசைபடுதுகளோ?)

இப்படியான காலத்தில் தான் விடுதலைப்புலிகளும் இந்தியராணுவமும் மேதியதன் விளைவு அதுவரை இந்தியா ஈழப்போராட்டத்துக்கு வழங்கி வந்த உதவியை நிறுத்திக் கொண்டது. புலிகள் சொந்த காலில் நிற்க வேண்டிய நிலமை முதல் முதலில் நிலமை என்பதால் அதை உடனடியாக சமாளிப்பதற்காக மக்களிடமிருந்து நேரடியாக பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டது.பின் குழுக்கல் முறையில் வழங்குவதாக அறிவித்திருந்தார்கள்.

அதே நேரம் மக்கள் பெரும் பொருளாதாரப் பிரச்சினையை எதிர் நோக்கியிருந்த நேரம் மக்கள் பணம் தற்போது இல்லையே என்று எதிர்ப்பை தெரிவிக்க முற்பட்ட வேளையில் அதற்க்கு மாற்றாக 2 பவுன் தரலாம் என்று அறிவித்திருந்தது. இதை அறிந்த அப்பா வீடு வந்து இதை பற்றி அம்மாவுடன் ஆலோசனை கூட்டம் இடம் பெற்றுக் கொண்டிருந்தார். நானும் அப்போது வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் வழமைபோல் காற்சட்டை இடுப்புக்கு கீழே தான் இருந்தது. எனது அறுஞா கொடி அப்பாவின் கண்ணில் பட்டுத்தொலைத்தது.
"வாடா செல்லம் குளிக்கப் போவம்" என்று கூறி (அப்பவும் யோசித்தனான் இந்தாள் ஒரு நாளும் குளிக்க வார்ப்பதுகிடையாதே என்று அப்ப அந்த சிறு மூளைக்கு எட்டவில்லை) குளிக்க வார்த்துக் விட்டு கத்தரிக்கோல் அறுஞா கொடியை கத்தரித்து எடுத்தார். ஏன் அறுக்கிறாய் என்று கேட்டதற்க்கு பிள்ளைக்கு இதை விட பெரிசா போடுவம் என்று சொல்லி விட்டு சென்றார். இதை நான் அம்மாவிடம் முறையிட அவா இயக்கம் கேட்கிறாங்கள் கொடுப்பம், திருப்ப தருவாங்கலாம்.

"என் வாழ்வின் முதல் இழப்பு அதுதான்"

அப்ப விட்டுப்போனது இன்று வரை அது இல்லை அது எங்கே??

இந்திய மண்ணே வணக்கம்

Written by தமிழ்பித்தன் on 8:53 AM

இந்தியாவுக்கு வயது 60 வது
ஓய்வு வெறும் வயதிலும்
சீறி யெலும் காளை போல்
கலக்க தொடங்யிருக்கு இப்போதான்

லேட்டா வந்தாலும் லேட்டஸா வளரும் நாடிது
பாரதா மாதா நீ வளரு படு யோரா
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று
தொன்று தொட்டு இன்று மட்டும் நீ காட்டினாய்

ஆன்மீகத்துக்கு ஒரு புத்தன்
அகிம்ஸைக்கு ஒரு காந்தி
அறிவுக்கு ஒரு அப்துல்கலாம்
அர்பணிப்புக்கு ஒரு கோடி...

அனைத்து இந்திய வாழ் மக்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இன்று அதிகாலை எம் வீடு தட்டி இனிப்பு வழங்கிய அந்த இந்திய சகோதரனுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்
(புலம் பெயர்ந்தாலும் தம்தேச வழமைகளை அவர்களும் இன்னும் தொடர்வதை கண்டு மகிழ்ச்சி)
புலம் பெயர்ந்து வாழும் இந்தியருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்